Skip to content
Home » மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

மகாராஷ்டிரா….. அஜித் பவார் கட்சி கரைகிறது…. முக்கிய தலைவர்கள் விலகல்

  மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது.  உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா, மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உடைத்து  இவர்கள் ஆட்சியை அமைத்தனர். இந்த நிலையில்  சமீபத்தில் நடந்த மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு அங்கு பலத்த அடி விழுந்தது. மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக கூட்டணி 17 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் கட்சி இணைந்த  மகா விகாஸ் அகாடி கூட்டணி 30 இடங்களை பிடித்தது.

இந்த தோல்வியால் பாஜக மேலிடம் அதிர்ச்சி அடைந்தது. அத்துடன்  கட்சிகளை உடைத்துக்கொண்டு ஓடிய எம்.எல்.ஏக்கள் என்ன செய்வது என தெரியாமல் விழிக்கிறார்கள்.் இப்போது சிலர் மீண்டும் பழைய கட்சிகளுக்கு செல்வது தான் எதிர்காலத்திற்கு சிறந்தது என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.

முதல்கட்டமாக அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து நான்கு முக்கியத் தலைவர்கள் விலகி விட்டனர். பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியைச் சேர்ந்த நான்கு முக்கியமான தலைவர்கள் அஜித் பவாரின் என்சிபி அணியில் இருந்து வெளியேறி மூத்த தலைவர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி அணியில் சேர உள்ளனர். இதனால் அஜித் பவாருக்கு சிக்கல் உண்டாகியுள்ளது. பிம்ப்ரி சின்ச்வாட் பிரிவின் தலைவரான அஜித் கவாஹனே, மாணவர் தலைவர் யாஷ் சானே மற்றும் ராகுல் போஸ்லே, பங்கஜ் பாலேகர் ஆகியோர் அஜித் பவார் அணியில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக அஜித் பவாரின் அணியில் இருந்து மீண்டும் சரத் பவாரின் அணிக்குத் திரும்பலாம் என்ற ஊகத்திற்கு மத்தியில் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, ஜுன் மாதம் சரத் பவார், கட்சியினை பலவீனப்படுத்த முயற்சித்தவர்களுக்கு கதவுகள் மூடப்பட்டுவிட்டது, என்றாலும் கட்சியின் பெயரினை களங்கப்படுத்தாமல் அமைப்பினை வலுப்படுத்தக்கூடிய தலைவர்கள் வரவேற்கப்படுகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், அஜித் பவார் நான்கு தொகுதிகளில் போட்டியிட்டு ராய்கட்டில் மட்டும் வெற்றி பெற்றது. சரத் பவாரின் கட்சி மக்களவைத் தேர்தலில் எட்டு இடங்களில் வென்றது. இந்த ஆண்டு இறுதியில் மகாராஷ்டிராவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இருக்கிறது.

கடந்த 2023-ம் ஆண்டு அஜித் பவார் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சரத் பவாரிடமிருந்து பிரிந்ததால் தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டு அணியாக பிளவுபட்டது. சரத் பவார் எதிர்க்கட்சிகளுடன் இருந்தநிலையில், அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் இணைந்து துணைமுதல்வரானார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!